
ஐசிசியின் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. அதற்கு முன் இந்திய அணி ஒரே ஒரு டி20 தொடரில் மட்டுமே விளையாட உள்ளது. அடுத்த வாரம் தொடங்க உள்ள ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடர் தான் உலகக்கோப்பை தொடருக்கு முன் இந்திய அணியின் கடைசி சர்வதேச டி20 தொடர்.
அதன் பின் இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியுடன் மோத உள்ளது. அதற்கு அடுத்ததாக மார்ச் மாதம் முதல் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ளது. ஐபிஎல் தொடர் முடிந்த சில நாட்களில் 2024 டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது. இப்படி சிக்கலான அட்டவணையில் இந்திய வீரர்கள் செயல்பட உள்ளனர்.
இதற்கிடையே டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியை பிசிசிஐ தயார் செய்ய வேண்டும். இந்திய அணி ஜனவரி மூன்றாவது வாரம் முதல் டி20 உலகக்கோப்பை தொடங்க உள்ள ஜூன் மாதம் வரை எந்த டி20 தொடரிலும் விளையாடாத நிலையில் ஐபிஎல் தொடரில் வீரர்களின் செயல்பாட்டை வைத்தே டி20 அணியை அறிவிக்க உள்ளது.