
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது 17 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன் பட்டம் வென்றது. இதனையடுத்து புயல் காரணமாக தாயகம் திரும்ப தாமதமான நிலையில் இன்று காலை இந்திய அணி டெல்லி வந்தடைந்தது. காலை 11 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்து இந்திய அணி வீரர்கள், அதன் பிறகு இந்திய அணியினர் அங்கிருந்து மும்பைக்கு புறப்பட்டனர்.
அதன்படி மும்பை நரிமண் முனையில் இருந்து வான்கடே கிரிக்கெட் மைதானம் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரம்மாண்ட பேரணிக்கும் பிசிசிஐ தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. மாலையில் தொடங்க இருந்த இந்த பேரணியானது மழை காரணமாக தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ரசிகர்கள் மழையிலும் இந்திய வீரர்களுக்காக வழி நெடுகிழும் காத்துக்கொண்டிருந்தனர்.
இதனையடுத்து திறந்தவெளி பேருந்தின் மூலம் இந்திய வீரர்கள் ஊர்வலத்தை தொடங்கி உள்ளனர். வழி எங்கிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் வீரர்களின் பேருந்தானது நகர்ந்து மும்பை வான்கடே மைதானத்தை வந்தடைந்தது. இதனையடுத்து மைதானத்தில் ஆயிரக்கனக்கான ரசிகர்கள் ஒன்று கூடி இந்திய அணி வீரர்களுக்கு தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.