
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று கேப்டவுனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 329 ரன்களைக் குவித்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் முகமது ரிஸ்வான் 7 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 80 ரன்களையும், பாபர் ஆசாம் 7 பவுண்டரிகளுடன் 73 ரன்களையும் இறுதியில் அதிரடியாக விளையாடிய காம்ரன் குலாம் 25 பந்துகளில் அரைசதம் கடந்ததுடன் 4 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 63 ரன்களையும் குவித்தனர். தென் ஆப்பிரிக்க தரப்பில் அறிமுக வீரர் குவேனா மபாகா 4 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
இதனையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ஹென்ரிச் கிளாசென் 97 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் அந்த அணி 43.1 ஓவர்களில் 248 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அஃப்ரீடி 4 விக்கெட்டுகளையும், நசீம் ஷா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.