
இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி ஆக்ரோஷமான அனுகுமுறையுடன் விளையாடி வருகிறது. குறிப்பாக இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி, ஒருநாள் தொடரில் படுதோல்வியைத் தழுவியது. இதனால் கம்பீர் மீதான விமர்சனங்களும் எழுந்தது.
ஆனால் அதன்பின் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெளிப்படுத்திய ஆட்டம் விமர்சனங்களுக்கு பதிலடியைக் கொடுத்தது. அதிலும் குறிப்பாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மழை காரணமாக இரண்டு நாள் ஆட்டம் முழுவதுமாக கைவிடப்பட்ட நிலையிலும், இந்திய அணி அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தி இருந்தது. மேலும் அப்போட்டியில் எண்ணிலடங்கா சாதனைகளையும் இந்திய அணி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் குவித்திருந்தது.
அதனைத்தொடர்ந்து நடைபெற்று முடிந்த டி20 தொடரிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, மூன்றாவது டி20 போட்டியில் 297 ரன்களைக் குவித்து புதிய வரலாறு படைத்தது. அத்துடன், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியதுடன, வங்கதேச அணியை ஒயிட்வாஷ் செய்தும் ரசிகர்களுக்கு விருந்து படைத்திருந்தது. இதனால் கௌதம் கம்பீரின் பயிற்சியாளர் பொறுப்பு குறித்த பாராட்டுகளும் குவிந்தன.