
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர். அதிலும் குறிப்பாக இங்கிலாந்து டெஸ்ட் தொடர் எதிவரும் நிலையில் இருவரும் ஓய்வை அறிவித்துள்ளது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
அதேசமயம் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள நிலையில், அவர்கள் இருவரும் இப்போட்டி பிசிசிஐ மத்திய ஒப்பந்தத்தில் A+ கிரேடில் இருந்து நீக்கப்படுவார்களா என்ற கேள்வி ரசிகர்களின் மனதில் எழுந்தது. ஆனால், இரண்டு மூத்த வீரர்களும் இன்னும் இந்திய அணியில் இருப்பதாகவும், அவர்களின் A+ தரம் அப்படியே இருக்கும் என்றும் பிசிசிஐ தெளிவுபடுத்தியுள்ளது.
சமீபத்தில் பிசிசிஐ தங்களது புதுபிக்கப்பட்ட ஒப்பந்த பட்டியலை வெளியிட்டிருந்தது. இதில் இந்திய அணியின் அனுபவ வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் மட்டுமே ஏ+ ஒப்பந்தத்தில் தக்கவைக்கப்பட்டிருந்தனர். பொதுவாக மூன்று வடிவங்களிலும் விளையாடும் வீரர்கள் மட்டுமே இந்த தரத்தில் இடம் பெறுவார்கள், ஆனால் தற்சமயம் இந்த பட்டியலில் ஜஸ்பிரித் பும்ரா மட்டுமே மூன்று வடிவங்களிலும் விளையாடி வருகிறார்.