
India vs England 4th Test: மான்செஸ்டரில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்ததன் மூலம் சில சாதனைகளைப் படைத்துள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கெனவே மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், அதில் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி இன்று மான்செஸ்டரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி தற்போது வரையிலும் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 58 ரன்களிலும், கேஎல் ராகுல் 46 ரன்னிலும், ஷுப்மன் கில் 12 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்துள்ளனர். இந்நிலையில் இப்போட்டியில் ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சில சாதனைகளையும் படைத்துள்ளார்.