
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக பொறுப்பு வகுத்து வரும் கே எல் ராகுல் தொடர்ந்து மோசமாக விளையாடி வருவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவ்வளவு நாள் கே எல் ராகுலை காப்பாற்றி வந்த தேர்வுக் குழு தலைவர் சேத்தன் சர்மாவும் தற்போது இல்லாததால் புதிய தேர்வு குழு தலைவர் ராகுலை நீக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் ராகுலுக்கு இருக்கும் பிரச்சனை குறித்து முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் ராகுல் பேட்டிங்கில் குறை இருப்பதை சுட்டிக்காட்டி உள்ளார். அதில், “ராகுல் பேட்டிங் செய்யும்போது முன்னாள் வந்து ஆடுவதா இல்லை பின்னால் நின்று ஆடுவதா என்று குழப்பத்தில் இருக்கிறார். பந்து திரும்பும் போது வலது காலை எடுத்து வைக்கிறார். ஆனால் பேட் நேராக இல்லை. பந்து திரும்பும் போது நீங்கள் வலது காலை எடுத்து வைத்து விட்டாலே அந்த பந்தை நீங்கள் விளையாடியாக வேண்டும்.
ஏனென்றால் அப்படி வரும் பந்தை நீங்கள் மிஸ் செய்து எல்பிடபிள்யூ ஆகவே அதிக வாய்ப்பு இருக்கிறது. இதே ரோகித் சர்மாவை பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கு தெரியும். காலுக்கு முன்னால் பேட் வரும்படி அவர் பார்த்துக் கொள்வார். இதனால் தான் ரோகித் சர்மா ரன் அடித்து வருகிறார். ராகுலுக்கு மனதளவில் ஏதோ தயக்கம் இருக்கிறது. அதனை அவர் சரி செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.