
இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்க இருக்கும் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மீது கிரிக்கெட் ரசிகர்களின் முழு கவனமும் திரும்பியுள்ளது. அதிலும் குறிப்பாக இந்தாண்டு உலகக்கோப்பை தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று கோப்பையைக் கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதில் குறிப்பாக இந்திய கிரிக்கெட் வரலாற்றில் விளையாட்டுத்துறையில் கபில் தேவ் தலைமையில் 1983 உலக கோப்பையை இந்திய அணி வென்றதே மாபெரும் புரட்சி ஏற்படுத்தியது என்று சொல்லலாம். அதனால் ஆலமரமாய் வளர்ந்து நிற்கும் இந்திய கிரிக்கெட்டில் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தோனி தலைமையில் 2011ஆம் ஆண்டு சொந்த மண்ணில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி மாபெரும் சரித்திரம் படைத்தது.
அதே போல தற்போது 1987, 1996, 2011 போல் அல்லாமல் வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக இந்திய மண்ணில் மட்டும் நடைபெறும் இந்த உலக கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான அணி வென்று சரித்திரம் படைக்குமா என்ற எதிர்பார்ப்பு உச்சகட்டமாக ரசிகர்களிடம் காணப்படுகிறது. இருப்பினும் 2013 சாம்பியன்ஸ் கோப்பைக்கு பின் கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து ஐசிசி தொடர்களில் இந்தியா தோல்வியை சந்திப்பதால் இம்முறை கோப்பையை வென்று விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.