அஸ்வினுக்கு பிரியா விடை கொடுத்த இந்திய வீரர்கள் - வைரலாகும் காணொளி!
பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்து, திடீரென சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிரா ஆனவுடன், அஸ்வின் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் செய்தியாளர் சந்திப்புக்கு வந்து மூன்று வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
முன்னதாக, அஸ்வின் குறித்த பல உணர்ச்சிகரமான காணொளிகளும் சமூக ஊடகங்களில் வெளிவந்தன. இந்நிலையில், இந்திய வீரர்கள் அஸ்வினுக்கு மரியாதை செலுத்துவது போன்ற காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இந்த காணொளியில், இந்திய அணி வீரர்கள் இருபுறமும் வரிசையில் நிற்க, அஷ்வின் நடுவில் இருந்து மைதானத்திற்குச் சென்று, வெளியேறும்போது ரோஹித்தை கட்டிப்பிடித்தார். இதன் மூலம் இந்திய வீரர்கள் அஸ்வினுக்கு பிரியாவிடை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும் பார்டர் கவாஸ்கர் தொடரின் நடுவில் அஸ்வின் ஏன் ஓய்வு பெற்றார்? என்ற கேள்விக்கு தற்போது யாரிடமும் பதில் இல்லை. கேப்டன் ரோஹித் சர்மாவும் இந்த கேள்விக்கு பத்திரிகையாளர் சந்திப்பில் பதிலளிக்கவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்டில் விளையாடும் லெவனில் அஷ்வின் நிச்சயம் இடம்பிடிப்பார் என்று பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவரது திடீர் ஓய்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது 38 வயதான ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளில் இதுவரை மொத்தமாக 765 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதுவரை அதிகபட்சமாக 11 முறை தொடர்நாயகன் விருதை வென்றுள்ளார். இதில் 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 537 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். இதுதவிர்த்து ஒருநள் கிரிக்கெட்டில் 156 விக்கெட்டுகளையும், டி20 கிரிக்கெட்டில் 72 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket