BGT 2024-25: கடைசி இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு; தனுஷ் கோட்டியானுக்கு வாய்ப்பு!
இந்திய அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்திருந்தன. அதேசமயம் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது டிராவில் முடிவடைந்துள்ளது.
தையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியானது எதிர்வரும் டிசம்பர் 26அம் தேதில் மெல்போர்னில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரில் முன்னிலைப் பெறும் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது.
இதில் நாதன் மெக்ஸ்வீனி அணியில் இருந்து நீக்கப்பட்டு மற்றொரு அறிமுக வீரரான சாம் கொன்ஸ்டாஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர்த்து இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் தொடரில் இருந்து விலகிய நிலையில், அவருக்கு மாற்றாக ஜெய் ரிச்சர்ட்சன் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. இதில் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முடிவில் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். இதனையடுத்து அஸ்வினுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வந்த நிலையிலும், அவருக்கான மாற்று வீரர் யார் என்பது குறித்த கேள்வியும் அதிகரித்தது.
அந்தவகையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் உள்ளூர் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு வரும் தனுஷ் கோட்டியானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 33 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள தனுஷ் கோட்டியான் பேட்டிங்கில் 2 சதம், 13 அரைசதங்கள் என 1525 ரன்களையும், பந்துவீச்சில் 3 ஐந்து விக்கெட் ஹாலுடன் சேர்த்து 101 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசி இரண்டு போட்டிகளுக்கான இந்திய டெஸ்ட் அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், ஷுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பந்த், ரோஹித் சர்மா (கே), ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், சர்ஃபராஸ் கான், தேவ்தத் படிக்கல், அபிமன்யு ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, தனூஷ் கோட்டியான்.
Also Read: Funding To Save Test Cricket
கடைசி இரண்டு போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித், சீன் அபோட், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, சாம் கொன்ஸ்டாஸ், மார்னஸ் லாபுஷாக்னே, நாதன் லையன், மிட்செல் மார்ஷ், ஜெய் ரிச்சர்ட்சன், மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர்.