IND A vs AUS A 1st Test: ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணி வீரர் துருவ் ஜூரெல் 140 ரன்களையும், தேவ்தத் படிக்கல் 150 ரன்களையும் சேர்த்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். 

Advertisement

ஆஸ்திரேலிய ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய ஏ அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி லக்னோவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய ஏ அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 532 ரன்களைச் சேர்த்து டிக்ளர் செய்வதாக அறிவித்தது.

Advertisement

அந்த அணியில் அதிகபட்சமாக ஜோஷ் பிலீப் 18 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 123 ரன்களையும், சாம் கொன்ஸ்டாஸ் 10 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 109 ரன்களைச் சேர்த்தனர். இந்திய ஏ அணி தரப்பில் ஹர்ஷ் தூபே 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய ஏ அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 116 ரன்களைச் சேர்த்திருந்தது. இதனையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை ஜெகதீசன் 50 ரன்களுடனும், சாய் சுதர்ஷன் 20 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடர்ந்தனர். 

இதில் ஜெகதீசன் 64 ரன்னிலும், சாய் சுதர்ஷன் 73 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 8 ரன்களுடனும் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த தேவ்தத் படிக்கல் - துருவ் ஜுரெல் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய துருவ் ஜூரெல் தனது சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். இதன் மூலம் இந்திய ஏ அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 403 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தை துருவ் ஜூரெல் 113 ரன்களுடனும், தேவ்தத் படிக்கல் 86 ரன்களுடனும்  தொடர்ந்தனர். 

Also Read: LIVE Cricket Score

இதில் தேவ்தத் படிக்கலும் தனது சதத்தைப் பூர்த்தி செய்தார். பின் 140 ரன்களில் துருவ் ஜூரெலும், 150 ரன்களிலும் தேவ்தத் படிக்கலும் விக்கெட்டை இழக்க, இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 531 ரன்களைச் சேர்த்து டிக்ளர் செய்வதாக அறிவித்த்து. இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நிலையில், மழை குறுக்கீட்டால் ஆட்டம் தடைப்பட்டது. அதன் பின்னரும்  மழை தொடர்ந்த காரணத்தால், இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. 

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News