தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார் ருதுராஜ் கெய்க்வாட்! 

Updated: Fri, Dec 22 2023 14:51 IST
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார் ருதுராஜ் கெய்க்வாட்!  (Image Source: Google)

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை சமன் செய்த இந்தியா அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2 – 1 என்ற கணக்கில் வென்றது. அதைத் தொடர்ந்து 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு பகுதியாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாட உள்ளது.

முன்னதாக, கடந்த 1992 முதல் இதுவரை தென் ஆப்பிரிக்க மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்தியா ஒருமுறை கூட வென்றதில்லை. இதன் காரணமாகவே இத்தொடரில் விராட் கோலி, பும்ரா போன்ற முதன்மை வீரர்கள் அடங்கிய வலுவான இந்திய அணி விளையாடவுள்ளது. அந்த வகையில் மோசமான வரலாற்றை இம்முறை மாற்றுவதற்காக போராட உள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கடந்த வாரமே தென் ஆப்பிரிக்காவுக்கு வந்து பயிற்சிகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் இத்தொடரிலிருந்து இளம் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் விலகி உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. குறிப்பாக நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரின் 2ஆவது போட்டியில் கை விரலில் காயத்தை சந்தித்த அவர் 3ஆவது போட்டியில் விளையாடவில்லை. தற்போது அதிலிருந்து குணமடைவதற்கு அதிக நாட்கள் தேவைப்படும் என்பதால் இத்தொடரில் இருந்து அவர் விலக வாய்ப்புள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஏற்கனவே முகமது ஷமி முழங்கால் காயத்தால் இத்தொடரிலிருந்து வெளியேறிய நிலையில் தற்போது இவரும் வெளியேறியுள்ளது இந்திய அணிக்கு சற்று பின்னடைவாக அமைந்துள்ளது. மேலும், இத்தொடரில் ஏற்கனவே விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்கா வந்த விராட் கோலி தற்போது குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு அவசர நிலைமை காரணமாக இந்தியாவுக்கு திரும்பியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆனாலும் குடும்பத்தை பார்த்து விட்டு டிசம்பர் 26ஆம் தேதி தொடங்க உள்ள முதல் போட்டிக்கு முன்பாக விராட் கோலி தென் ஆப்பிரிக்கா வந்து இந்திய அணியுடன் இணைந்து கொள்வார் என்றும் பிசிசிஐ செய்தி வட்டாரங்கள் கூறுகின்றன. குறிப்பாக முதல் போட்டி தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பாகவே இந்திய அணியுடன் இணைந்து விராட் கோலி களமிறங்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை