
ZIM vs SA, 2nd Test: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் வியான் முல்டர் இரட்டை சதத்தைப் பதிவுசெய்து அசத்தியுள்ளார்.
ஜிம்பாப்வே - தென் ஆப்பிரிக்க அணி அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (ஜூலை 6) புலவாயோவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு டோனி டி ஸோர்ஸி - லெசெகோ செனோக்வானே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஸோர்ஸி 10 ரன்னிலும், அறிமுக வீரர் செனொக்வானே 3 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் வியான் முல்டர் மற்றும் டேவிட் பெடிங்ஹாம் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வியான் முல்டர் சதமடித்து அசத்தினார். மேற்கொண்டு இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 180 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் டேவிட் பெடிங்ஹாம் 82 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். பின்னர் முல்டருடன் இணைந்த லுவான் ட்ரே பிரிட்டோரியஸும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியதுடன் தனது அரைசதத்தையும் பதிவுசெய்தார். மறுபக்கம் இந்த போட்டியில் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வியான் முல்டர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தைப் பதிவுசெய்தார்.