
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9ஆவது சீசன் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. மேற்கொண்டு கடந்த 2007ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணியானது 17 ஆண்டுகளுக்கு பின் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
இதனையடுத்து நாடு திரும்ப இருந்த இந்திய அணி வீரர்கள் இன்று அதிகாலை டெல்லி வந்தடைந்னர். இதையடுத்து டெல்லி விமான நிலையத்தில் கோப்பையுடன் வந்த இந்திய அணி வீரர்களுக்கு ரசிகர்கள் புடைசூழ உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. அதன்பின் பிரதமர் நரேந்திர மோடியை அவரது வீட்டில் சந்திய இந்திய அணி வீரர்கள் வாழ்த்து பெற்றனர். மேலு டி20 உலகக்கோப்பையுடன் இந்திய அணி வீரர்கள், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உள்ளிட்டோருடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.
அதன்பின் டெல்லியில் இருந்து மும்பைக்கு விமானம் மூலம் வந்த இந்திய வீரர்களுக்கு விமான நிலையத்திலும் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. அதன்பின் இந்திய வீரர்கள், அணியின் பயிற்சியாளர்கள், பிசிசிஐ உறுப்பினர்கள் என அனைவரும் டி20 உலகக்கோப்பையை கையில் ஏந்திய படி திறந்தவெளி பேருந்தில் மும்பை நரிமண் முனையில் இருந்து வான்கடே கிரிக்கெட் மைதானம் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரம்மாண்ட பேரணிக்கும் பிசிசிஐ தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. மாலையில் தொடங்க இருந்த இந்த பேரணியானது மழை காரணமாக தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ரசிகர்கள் மழையிலும் இந்திய வீரர்களுக்காக வழி நெடுகிழும் காத்துக்கொண்டிருந்தனர்.