
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தவகையில் ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது பெர்த்தில் உள்ள ஆப்டஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணியானது முதல் இன்னிங்ஸில் எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதில் யஷஸ்வி ஜெஸ்வால், தேவ்தத் படிக்கல் ஆகியோர் ரன்கள் ஏதுமின்றியும், விராட் கோலி, வாஷிங்டன் சுந்தர், நிதீஷ் ரெட்டி ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த நிலையில், அதிகபட்சமாக நிதீஷ் ரெட்டி 41 ரன்களையும், ரிஷப் பந்த் 37 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் இந்திய அணி 150 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.
ஆஸ்திரேலிய அணி தரபபில் ஜோஷ் ஹெசில்வுட் 4 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கும் எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அதிலும் குறிப்பாக ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷாக்னே, டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் என நட்சத்திர வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் 26 ரன்களையும், அலெக்ஸ் கேரி 21 ரன்களையும் சேர்த்தனர்.