
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஆண்டின் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அந்தவகையில் நடப்பு ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை தேர்வு செய்யும் பணிகளில் ஐசிசி இறங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக நடப்பு ஆண்டில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர் வீராங்கனைகளுக்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி நேற்றைய தினம் அறிவித்தது. இதில் சிறந்த டெஸ்ட் வீரருக்கான பரிந்துரை பட்டியலில் இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா, இங்கிலாந்தின் ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் ஆகியோரும், இலங்கை அணியின் கமிந்து மெண்டிஸும் இடம்பிடித்துள்ளனர்.
இதில் ஜஸ்பிரித் பும்ரா நடப்பு 2024ஆம் ஆண்டில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 73 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இதில் அவர் 14.92 என்ற சராசரியில் 5 முறை ஐந்து விக்கெட் ஹால் வீழ்த்தியதுடன், நடப்பு ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் சாதனையையும் படைத்துள்ளார். அதேசமயம் இலங்கை அணியின் இளம் ஆல் ரவுண்டரான கமிந்து மெண்டிஸ் நடப்பு ஆண்டில் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 74.92 என்ற சராசரியில் 1049 ரன்களைக் குவித்துள்ளார்.