
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஆண்டின் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அந்தவகையில் 2024 ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை தேர்வு செய்யும் பணிகளில் ஐசிசி இறங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக 2024ஆம் ஆண்டிற்கான ஐசிசி டெஸ்ட் வீரராக இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதன்படி கடந்த ஆண்டில் ஜஸ்பிரித் பும்ரா 13 டெஸ்ட் போட்டிகளில் 357 ஓவர்கள் வீசி 14.92 என்ற சராசரியுடன் 71 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலக் கடந்த 2024ஆம் ஆண்டில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரராகவும் ஜஸ்பிரித் பும்ரா சதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சாதனையின் மூலம், ஒரு காலண்டர் ஆண்டில் 70க்கும் மேற்பட்ட டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய நான்காவது இந்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை பும்ரா பெற்றார். இதற்கு முன் இந்திய ஜாம்பவான்களான ரவிச்சந்திரன் அஸ்வின், அனில் கும்ப்ளே மற்றும் கபில் தேவ் ஆகியோர் இந்த சாதனையை செய்துள்ளனர். இதன் காரணமாகவே தற்சமயம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருது பும்ராவுக்கு வழங்கப்பட்டுள்ளது.