
பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நாளை (மார்ச் 9) நடைபெறவுள்ளது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவும் பட்சத்தில் இந்திய அணியின் நட்சத்திர பேட்டரும், அணியின் கேப்டனுமான ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை தொடருடன் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஓய்வுபெறுவது குறித்து ஏதும் ஆலோசிக்கப்படவில்லை என அணியின் துணைக் கேப்டன் ஷுப்மன் கில் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய ஷுப்மன் கில், “ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரின் ஓய்வு குறித்து இந்திய அணியில் தற்போது எந்தவொரு ஆலோசனையும் மேற்கொள்ளப்படவில்லை. எங்களுடைய ஆலோசனைகள் அனைத்தும் இந்த போட்டியை வெல்வது பற்றி மட்டும் தான் இருந்தது. இந்த போட்டியை வெல்ல நாம் என்ன செய்ய வேண்டும் என்பதுதான். ரோஹித் சர்மாவும் அதையேதான் யோசித்துக் கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.