ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது.
-mdl.jpg)
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசனானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் நான்காவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி சமீபத்தில் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து ஒயிட்வாஷ் ஆனது. அதேசமயம் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது. அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வரும் இரு அணிகளும் மோதவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
Also Read
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இதில் காயத்தில் இருந்து மீண்டுள்ள ஜேமி ஸ்மித்திற்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், அணியின் விக்கெட் கீப்பராகவும் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடிய டாம் பான்டனுக்கு இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை.
இதுதவிர்த்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜோஃப்ரா ஆர்ச்சருடன் சேர்ந்து பிரைடன் கார்ஸ் மற்றும் மார்க் வுட் ஆகியோருக்கும் பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக ஆதில் ரஷித் மட்டுமே இடம்பிடித்துள்ளார். அவருக்கு துணையாக லியாம் லிவிங்ஸ்டோன் மற்றும் ஜோ ரூட் ஆகியோராலும் பந்துவீச்சில் ஒரு சில ஓவர்களை வீச முடியும் என்பதால் அவர்களை இங்கிலாந்து அணி நம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: பில் சால்ட், பென் டக்கெட், ஜேமி ஸ்மித், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மார்க் வுட்.
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணி: பில் சால்ட், பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜேக்கப் பெத்தேல், டாம் பான்டன், பிரைடன் கார்ஸ், அடில் ரஷித், கஸ் அட்கின்சன், மார்க் வுட், ஜேமி ஓவர்டன், சாகிப் மஹ்மூத், ஜேமி ஸ்மித், ஜோஃப்ரா ஆர்ச்சர்.
Also Read: Funding To Save Test Cricket
Win Big, Make Your Cricket Tales Now