
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் எதிர்வரும் மார்ச் 23ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இத்தொடருக்கு முன்னதாக அனைத்து ஐபிஎல் அணிகளும் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலம் நடத்தப்பட்டது. அந்தவகையில், ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலமானது கடந்த நவம்பர் மாதம் சௌதீ அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் நடைபெற்றது. இதில் மொத்தம் 574 வீரர்கள் இறுதி செய்யப்பட்டு ஏலம் நடத்தப்பட்டது.
இந்த ஏலத்தில் அதிகபட்சமாக இந்திய அணியைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தை ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயரை ரூ.26.76 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியும் ஏலத்தில் எடுத்தது. இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் எனும் சாதனைகளையும் படைத்தனர். அதேசமயம் டேவிட் வார்னர், பிரித்வி ஷா, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், ஸ்டீவ் ஸ்மித் போன்ற வீரர்கள் ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை.
இதில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியானது ஏலத்திற்கு முன்னதாக ரஷித் கான், சாய் சுதர்ஷன், ஷாரூக் கான் மற்றும் ராகுல் திவேத்தியா உள்ளிட்ட வீரர்களைத் தக்கவைத்து மீதமிருந்த வீரர்களை அணியில் இருந்து விடுவித்தது. பின்னர் மெகா ஏலத்தில் ஜோஷ் பட்லர், காகிசோ ரபாடா, வாஷிங்டன் சுந்தர், முகம்து சிராஜ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களை கடும் போட்டிக்கு பிறகு அணியில் சேர்த்துள்ளது.