
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், மற்றொரு இடத்திற்கு நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் துணைக்கேப்டன் ஷுப்மன் கில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். அவரைத்தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசாம் இரண்டாம் இடத்தில் தொடரும் நிலையில் தென் ஆப்பிரிக்காவின் ஹென்ரிச் கிளாசென், இந்திய அணியின் விராட் கோலி ஆகியோர் தலா ஒரு இடம் முன்னேறியுள்ளார்.
அதேசமயம் முன்னதாக மூன்றாம் இடத்தில் இருந்த இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா இரண்டு இடங்கள் பின் தங்கி 5ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அவர்களைத் தொடர்ந்து அயர்லாந்தின் ஹேரி டெக்டர் 6ஆம் இடத்திலும், நியூசிலாந்தின் டேரில் மிட்செல் 7ஆம் இடத்திலும் உள்ள நிலையில், நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அபாரமாக செயல்பட்டு வரும் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு இடம் முன்னேறி 8ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.