IND vs AUS: ஸ்ரேயாஸ் வந்தது இந்திய அணிக்கு நல்ல அறிகுறி தான் - ராகுல் டிராவிட்!
ஆஸ்திரேலிய அணியுடனான 2ஆவது டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணியின் ப்ளேயிங் 11 எப்படி இருக்கும் என்பது குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் முக்கிய அப்டேட்டை கொடுத்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் போட்டியில் வெற்றி கண்டு இந்திய அணி 1 - 0 என முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து 2ஆவது டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 17ஆம் தேதி முதல் டெல்லியில் உள்ள அருண் ஜெய்ட்லில் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
கடந்த போட்டியில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் சற்று சொதப்பலாக இருந்தது. எனவே அதனை இப்போட்டியில் சரிசெய்தாக வேண்டும். அதற்கேற்றார் போல நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தில் இருந்து குணமடைந்துவிட்டதாக தகவல் வெளியாகின. மேலும் உடற்தகுதி தேர்விலும் தேர்ச்சிப்பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Trending
ஆனால் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வழி விட வேண்டும் என்றால் அது சூர்யகுமார் யாதவால் மட்டுமே முடியும். ஏனென்றால் விக்கெட் கீப்பர் தேவைக்காக கேஎஸ் பரத் கண்டிப்பாக அணிக்கு தேவை. உலகின் நம்பர் 1 பேட்டராக வலம் வரும் சூர்யகுமார், ஒருநாள் கிரிக்கெட்டிலும் தன்னை நிரூபித்துவிட்டார். தற்போது தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகியிருப்பதால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்க வேண்டுமா? அல்லது ஸ்ரேயாஸுக்கு இடத்தை திருப்பி தர வேண்டுமா என்ற குழப்பம் எழுந்துள்ளது.
இந்நிலையில் இதற்கு ராகுல் டிராவிட் பதில் அளித்துள்ளார். அதில், “காயத்தில் இருந்து வந்த ஒருவருக்கு மீண்டும் வாய்ப்பு தருவது சிறந்த விஷயமாகும். காயத்தை காரணம் காட்டி நல்ல வீரர்களை ஒதுக்குவது சரியில்லை. ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அடுத்த 2 நாட்களுக்கு அவரின் செயல்பாடுகளை கண்காணிப்போம். ஒருவேளை 5 நாட்களும் நிலைத்து நின்று விளையாடக்கூடிய திறன் அவருக்கு இருந்தால் நிச்சயம் ப்ளேயிங் 11 க்குள் வருவார்.
ஸ்ரேயாஸ் ஐயர் ஸ்பின்னர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடக்கூடியவர். அதுவும் கடினமான சூழல்களில் அவரின் சுபாவம் உதவியாக இருக்கும். கடினமான சூழல்களில் மிகவும் நிதானமாக நின்று ஆட்டத்தை மாற்றிவிடுகிறார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஸ்ரேயாஸ், ஜடேஜா, ரிஷப் பந்த் என 3 பேர் மட்டுமே இந்திய அணியை சிக்கலில் இருந்து காப்பாற்றுகின்றனர். எனவே ஸ்ரேயாஸ் வந்தது இந்திய அணிக்கு நல்ல அறிகுறி தான்” என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now