
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியானது தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டனி நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் மற்றும் ஜேமி ஸ்மித் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் ஜேமி ஸ்மித் 37 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ஜோ ரூட்டும் பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினார்.
அதேசமயம் மற்றொரு தொடக்க வீரர் பென் டக்கெட் தனது அரைசதத்தை கடந்த நிலையில் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 60 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் பதிவுசெய்த ஜோ ரூட்டும் 57 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஹாரி புரூக் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரும் நிதாமாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாரி ப்ரூக் அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 58 ரன்களில் ஹாரி புரூக்கும், 37 ரன்களில் ஜோஸ் பட்லரும் ஆட்டமிழந்தனர்.