
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையில் இருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் வெறும் 109 ரன்களுக்கு ஆல அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி சார்பில் அதிகபட்சமாக மேத்யூ குணாமென் 5 விக்கெட்டுகளையும், நேதன் லயோன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்பின் முதல் இன்னிங்ஸை துவங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு உஸ்மான் கவாஜா 60 ரன்களும், லபுசாக்னே 31 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்கள் பெரிதாக ரன் குவிக்காததால் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 197 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் மற்றும் ரவிச்சந்திர அஸ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் 88 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸிலும் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறி 163 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக புஜாரா 59 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணி சார்பில் நாதன் லையன் 8 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.