
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ர. தற்போது 29 வயதான இந்தியாவுக்காக 30 டெஸ்டுகள், 72 ஒருநாள், 60 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். சமீபகாலமாகக் காயம், ஓய்வு போன்ற காரணங்களால் டி20 உலகக் கோப்பை உள்பட பல ஆட்டங்களில் அவர் விளையாடவில்லை.
முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாகக் கடந்த செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்தார். பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாதெமியில் சிகிச்சையும் பயிற்சியும் பெற்று வந்த பும்ரா, முழு உடற்தகுதியை அடைந்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்து இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியில் பும்ரா சேர்க்கப்பட்டார். திடீர் திருப்பமாக, ஒருநாள் தொடரிலிருந்து பும்ரா விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்தது.
பந்துவீசும் அளவுக்கான உடற்தகுதியை அடைய இன்னும் சிறிது காலம் தேவைப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டது. மும்பையில் பந்துவீச்சுப் பயிற்சி எடுத்தபோது தான் பும்ராவால் சர்வதேச ஆட்டத்தில் முழு உடற்தகுதியுடன் விளையாடுவது தற்போது சாத்தியமில்லை எனத் தெரிய வந்தது. இதையடுத்து அணியில் இருந்து அவர் விலகினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் இரு டெஸ்டுகளிலும் பும்ரா சேர்க்கப்படவில்லை.