
இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த பேட்டர்களில் ஒருவாராக இருப்பவர் விராட் கோலி. மேலும் இவர் சர்வதேச கிரிக்கெட்டிலும் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இந்திய அணிகாக கடந்த 2008ஆம் ஆண்டு அறிமுகமான இவர், இதுநாள் வரை இந்திய அணிக்காக 113 டெஸ்ட் போட்டிகளில் 29 சதங்கள், 30 அரசதங்கள் என 8,848 ரன்களையும், 295 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய 50 சதங்கள், 72 அரைசதங்களுடன் 13,906 ரன்களைச் சேர்த்துள்ளார்.
மேற்கொண்டு சர்வதேச டி20 போட்டிகளில் 125 போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 38 அரைசதங்களுடன் 4188 ரன்களைக் குவித்து அசத்த்ஜியுள்ளார். மேலும் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியிலும் அபாரமாக விளையாடி விராட் கோலி அரைசதம் கடந்ததுடன், அணியின் வெற்றியிலும் முக்கிய பங்காற்றினார். மேலும் அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்தும் அவர் தனது ஓய்வு முடிவையும் அறிவித்தார்.
முன்னதாக இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாகவும் விராட் கோலி அறியப்பட்டார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 2014ஆம் ஆண்டு தனது கேப்டன் பதவியில் இருந்து விலகிய சமயத்தில், அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி ஐசிசி டெஸ்ட் தர வரிசையில் ஏழாவது இடத்தில் இருந்த இந்திய அணியை முதலிடத்திற்கு கொண்டு வந்ததுடன், தொடர்ச்சியாக அந்த இடத்தை தக்கவைத்த பெருமையையும் பெற்றார்.