
இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2023 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவி கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. இதைத்தொடர்ந்து 2024 டி20 உலகக் கோப்பைக்கான பயணத்தை தொடங்கியுள்ள இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாடுவார்களா என்பது சந்தேகமாகியுள்ளது.
ஏனெனில் 2022 டி20 உலக கோப்பையில் விராட் கோலியை தவிர்த்து ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், புவனேஸ்வர் குமார், ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக் போன்ற சீனியர் வீரர்கள் சுமாராக செயல்பட்டது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதனால் சீனியர்களை கழற்றி விட்டு 2022 ஐபிஎல் கோப்பையை வென்ற ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய அணியை 2024 டி20 உலகக் கோப்பையில் களமிறக்கும் திட்டத்தை பிசிசிஐ கையிலெடுத்துள்ளது.
இதன் காரணமாகவே கடந்த டி20 உலகக் கோப்பைக்கு பின் நடைபெற்று முடிந்த தென் ஆப்பிரிக்க டி20 தொடர் உட்பட மேற்கொண்டு ரோஹித் மற்றும் விராட் ஆகியோர் எவ்விதமான டி20 போட்டியிலும் விளையாடாமல் இருக்கின்றனர். இதற்கிடையே ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.