ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 33ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் குசால் மெண்டிஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் முதல் பந்தில் பவுண்டரி அடித்த ரோஹித் சர்மா அடுத்த பந்திலேயே க்ளீன் போல்டாகி ஏமாற்றமளித்தார். இதையடுத்து ஷுப்மன் கில்லுடன் இணைந்த நட்சத்திர வீரர் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 

Advertisement

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அணிக்கு அஸ்திவாரத்தை அமைத்துக்கொடுத்தனர். அதன்பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷுப்மன் கில் 11 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 92 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 11 பவுண்டரிகளுடன் 88 ரன்களைச் சேர்த்திருந்த விராட் கோலியும் மதுஷங்கா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

இதையடுத்து இணைந்த கேஎல் ராகுல் - ஸ்ரேயாஸ் ஐயர் கூட்டணியும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் கேஎல் ராகுல் 21 ரன்களுக்கும், அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 12 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

இருப்பினும் மறுபக்கம் அதிரடியைக் கைவிடாத ஸ்ரேயாஸ் ஐயர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின்னும் அதிரடியாக விளையாடி வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 56 பந்துகளில் 3 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 82 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்மூலம் இலங்கை வீரர் தில்ஷன் மதுஷங்கா தனது 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். 

இறுதியில் ரவீந்திர ஜடேஜா தனது பங்கிற்கு ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என 35 ரன்களைச் சேர்த்து பினிஷிங் கொடுத்தார். இதன்மூலம் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்களைச் சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் தில்ஷன் மதுஷங்கா 10 ஓவர்களை வீசி 80 ரன்களைக் கொடுத்தாலும், 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News