ஐசிசி விருதுகள் 2024: சிறந்த டெஸ்ட் வீரர் பரிந்துரை பட்டியலில் பும்ரா, ரூட்!

Updated: Tue, Dec 31 2024 10:14 IST
Image Source: Google

ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஆண்டின் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அந்தவகையில் நடப்பு ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை தேர்வு செய்யும் பணிகளில் ஐசிசி இறங்கியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக நடப்பு ஆண்டில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர் வீராங்கனைகளுக்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி நேற்றைய தினம் அறிவித்தது.  இதில் சிறந்த டெஸ்ட் வீரருக்கான பரிந்துரை பட்டியலில் இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா, இங்கிலாந்தின் ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் ஆகியோரும், இலங்கை அணியின் கமிந்து மெண்டிஸும் இடம்பிடித்துள்ளனர். 

இதில் ஜஸ்பிரித் பும்ரா நடப்பு 2024ஆம் ஆண்டில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 73 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இதில் அவர் 14.92 என்ற சராசரியில் 5 முறை ஐந்து விக்கெட் ஹால் வீழ்த்தியதுடன், நடப்பு ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் சாதனையையும் படைத்துள்ளார். அதேசமயம் இலங்கை அணியின் இளம் ஆல் ரவுண்டரான கமிந்து மெண்டிஸ் நடப்பு ஆண்டில் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 74.92 என்ற சராசரியில் 1049 ரன்களைக் குவித்துள்ளார்.

இந்த ஆண்டில் மொத்தமாக 18 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள மெண்டிஸ் அதில் 5 சதங்களையும், 3 அரைசதங்காளையும் அடித்துள்ளார்.  அதேசமயம் இங்கிலாந்தின் ஹாரி புரூக் 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4 சதங்கள் மூன்று அரைசதங்கள் 1100 ரன்களைச் சேர்த்ததன் மூலம் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார். அதேசமயம் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் வீரரான ஜோ ரூட்டும் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

Also Read: Funding To Save Test Cricket

நடப்பு 2024ஆம் ஆண்டில் 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட் 55.57 என்ற சராசரியில் 1556 ரன்களைச் சேர்த்துள்ளார். இதில் 6 சதங்களையும், 5 அரைசதங்களையும் அடித்துள்ளார். இதனால் இந்த நான்கு பேரில் யாரேனும் ஒருவர் வாக்கெடுப்பின் அடிப்படையில் நடப்பு ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் விருதை வெல்வார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை